Tuesday, January 28, 2014

பெருமாளே கிரிவலம் வரும் தலம்..!



தன்னை நம்பி வருவோர்க்கு நற்கதி நல்குவான் நாராயணன். அவன் கோயில் கொண்டருளும் தலங்களுள் ஒன்று, துத்திப்பட்டு. ஒருசமயம் ரோமச ரிஷியும், அவரது சீடர்களும் கானகத்தில் தவம் புரிந்து வந்தபோது பிரதூர்த்தன் என்ற அரக்கன் தொல்லைகள் கொடுத்து வந்தான். இதனால் வெகுண்ட ரிஷி அந்த அரக்கனை 'புலியாகக் கடவது' என்று சாபமிட்டார். புலியுருவை அடைந்த அரக்கன் கானகத்தில் வாழும் உயிரினங்களை அழிக்க முற்பட்டதுடன், முனிவர்களை முன்பைவிட இன்னும் அதிகமாக துன்புறுத்தி வந்தான். வேறு வழியின்றி முனிவர்கள் இந்திரனை சரணடைந்தனர்.

முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்திரன் தானும் புலியாக உருமாறி பிரதூர்த்தனுடன்  போரிட்டான். இறுதியில் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் அரக்கனை அழிக்க முற்பட்டபோது, சாகும் தருவாயில் அரக்கன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். அவனை மன்னிக்க விரும்பிய இந்திரனும், தேவர்களும் அந்த அரக்கன் நற்கதி பெற வேண்டுமென்று திரு மாலை வழிபட்டனர். திருமாலும் சங்கு, சக்ரதாரியாக தேவியருடன் காட்சி கொடுத்து, அரக்கனுக்கு நற்கதி அளித்தனர்!

அரக்கனுக்கு அருள்புரிந்த அதே கோலத்தில் அங்கேயே எழுந்தருளுமாறு ரோமச ரிஷியும், அவரது சீடர்களும் திருமாலிடம் வேண்டிக் கொள்ள முனிவர்களின் அன்புக் கோரிக்கையை ஏற்று திருமால் இங்கேயே கோயில் கொண்டார். பிரதூர்த்தன் நற்கதியடைந்த தலமாதலால் 'பிரதூர்த்தப்பட்டு' என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் 'துத்திப்பட்டு' ஆகிவிட்டது. இக்கோயிலை 'வரதராஜ பெருமாள் கோயில்' என்றே தற்சமயம் அழைக்கிறார்கள்! நுழைவாயிலில் நாற்பத்தைந்து அடி உயரமுள்ள ஐந்து நிலை ராஜகோபுரம் நடுநாயகமாக அமைந்துள்ளது. கோயில் ஒரே பிராகாரம் கொண்டது. அதில் மூன்று சந்நதிகள் உள்ளன.

மகா மண்டபமும், ஒருமுக மண்டபமும் உள்ளன. கொடிமரத்தைக் கடந்து கருடாழ்வாரை தரிசித்து, மகாமண்டபத்தை கடந்து, மூல ஸ்தானத்தை அடைந்ததும், பிந்து மாதவராய் பெருமாள் (வரதராஜர்) ஆறடி உயரம் கொண்ட மூர்த்தியாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஒருபுறம் பெருந்தேவியும் மறுபுறம் குமுதவல்லி நாச்சியாரும் பெருமாளுடன் சேவை சாதிக்கின்றனர். பெருமாள் சதுர்புஜங்களில் மேலே சங்கு, சக்கரம் தரித்தும், கீழ்கரங்களில் கதை, அபய முத்திரையுடனும் காட்சி தருகின்றார். உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.

மூலவர் சந்நதிக்கு மேலே 'தேஜோ விமானம்' அணி செய்கின்றது. பெருந்தேவி  தாயாரும், ஆண்டாளும் தனித்தனி சந்நதிகளில் கோயில் கொண்டுள்ளனர். திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் தனியே தரிசனம் தருகிறார். நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் உடையவர் திருவுருவங்களும் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மண்டபச் சுவரில் இத்தல த்தில் நற்கதியடைந்த பிரதூர்த்தனின் திருவுருவம் உள்ளது. இந்த புண்ணிய பதியில் விஷ்ணு புராணத்தை பராசர முனிவர் மைத்ரேய மகரிஷிக்கு எடுத்துரைத்ததாக கூறப்படுகின்றது.

தை மாதம் காணும் பொங்கலன்று அருகிலுள்ள நிமிஷாசல மலையைச் சுற்றி உத்ஸவ மூர்த்தி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இந்த மலையில் 'ரோமச ரிஷி' இன்றும் தவம் இருப்பதாகவும், அவருக்குக் காட்சி கொடுக்கவே பெருமாள் மலையை வலம் வருவதாகவும் ஐதீகம். உற்சவ காலங்களில் இவ்வூரைச் சுற்றியுள்ள பத்து கிராமங்களுக்கும் பெருமாள் செல்வது இப்போதும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத் தக்கது! வேலூர் மாவட்டம் ஆம்பூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் துத்திப்பட்டு அமைந்துள்ளது.

0 comments:

Post a Comment