Tuesday, January 28, 2014

மரபுசார்ந்த பார்வைக் குறைபாட்டை போக்கும் நவீன மரபணு சிகிச்சை வெற்றி..!



மரபுசார்ந்த அரிய வகை பார்வை குறைபாட்டை மரபணு சிகிச்சை மூலம் போக்க முடியும் என்ற வியத்தகு சாதனையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.அதே சமயம் ‘இந்த மரபணு சிகிச்சையின் பலன் நோயாளியின் இறுதிக் காலம் வரை நீடிக்குமா…? என்பதை இப்போதே உறுதிப்படுத்த முடியாது’ என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி கண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நுப்பீல்டு கண் ஆய்வுக்குழுவின் தலைவரான பேராசிரியர் ராபர்ட் மக்லெரன் தெரிவித்துள்ளார்.

விழித்திரைக்கு பின்புறம் உள்ள ஒளியை உள்வாங்கும் செல்கள், மெல்ல மெல்ல வலுவிழந்து, இறந்தும் விடுவதால் இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை பலரும் இத்தகைய பார்வை இழப்பு நோய்க்கு உள்ளாகும் நிலை இருந்து வருகிறது.
கண்களின் விழித்திரையை பலவீனமடையச் செய்து, அதன் விளைவாக பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும் இத்தகைய மரபணுவை மாற்றுவதன் மூலம் இந்த நோய் குறைபாட்டை போக்க முடியும் என்று இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவர்கள் தங்களின் பரிசோதனைகளின் மூலம் தற்போது கண்டறிந்துள்ளனர்.

‘ஜீன் தெரபி’ எனப்படும் இத்தகைய மரபணு மாற்று சிகிச்சையின் மூலம் பார்வைத் திறனை முழுவதுமாக இழந்துவிட்ட 6 நோயாளிகளிடம் சோதனை முறையில் இந்த நவீன சிகிச்சை முறையை மேற்கொண்டதில், சில மாதங்களுக்குப் பிறகு மங்கலான வெளிச்சத்தில் பார்வைத் திறனில் மேம்பாடுகள் இருப்பதாக நோயாளிகள் தெரிவித்தனர்.ஆறு பேரில் இருவரால் சிறிய எழுத்துகளையும் படிக்க முடிந்தது என்ற தகவலை ‘லான்செட்’ மருத்துவ இதழ் தெரிவிக்கின்றது.

இவர்களில் ஒருவரான வெய்ன் தாம்ப்சன், தனது 17 வயதில் பார்வை குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டவர். இந்த ஆராய்ச்சியின் மூலம் மீண்டும் பார்க்கும் திறனை பெற்றுள்ள அவர் கூறுகையில், ‘கடந்த 25 ஆண்டுகளாக எந்தப் பொருளையும் தெளிவாக பார்க்க முடியாமல் இருட்டு உலகத்தில் வாழ்ந்து வந்தேன்.எனது 9 வயது மகளின் அழகு முகத்தை பார்க்கவே முடியாதா…? என இரவும், பகலும் ஏங்கிக் கொண்டிருந்தேன்.

இப்போது, அவளது மலர் முகத்தை என்னால் மிக துல்லியமாக பார்க்க முடிகிறது. அது மட்டுமின்றி அவளது வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளையும் என்னால் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.பகலில் சூரிய வெளிச்சத்தை கூட பார்க்க இயலாத என்னால் இப்போது இரவு நேரத்தில் வானத்தில் உள்ள மங்கலான நட்சத்திரங்களையும் பார்க்க முடிகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் நோயாளிகள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் வரை பார்வை மேம்பாடுகள் பராமரிக்கப்படக்கூடும். 2 ஆண்டு கால தீவிர கண்காணிப்புக்கு பிறகே இந்த மரபணு சிகிச்சை நிரந்தரப் பலனை அளிக்குமா? என்பதை தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment