Tuesday, January 28, 2014

சிகிளீனர் வழியாக டூப்ளிகேட் பைல் நீக்கம்..!



கம்ப்யூட்டர் போல்டர்களில், ஒரே பைல் இரண்டுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நமக்கு எரிச்சலைத் தரும் இடமாகும். காரணங்கள் - தேவையின்றி, இவை ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. அடுத்ததாக, இவற்றைக் கையாள்வது மிகவும் சிரமமான செயலாக அமைகிறது. ஒரு சில போட்டோக்கள், மீண்டும் மீண்டும் வெவ்வேறு போல்டர்களில் இருந்தால், எதனை அழிப்பது, எந்த போல்டரில் வைத்துக் கொள்வது என்பது நமக்கு எரிச்சல் தரும் செயல் தானே. அதிர்ஷ்டவசமாக, நமக்கு சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை நீக்கும் எளிய வழி ஒன்றைத் தருகிறது.

சிகிளீனர் புரோகிராமினை, நிச்சயமாக அனைவரும் தங்கள் கம்ப்யூட்டரில் வைத்திருப்பார்கள். விண்டோஸ் சிஸ்டத்தில், தேவையற்றவற்றை நீக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள இந்த புரோகிராமினை நாம் அனைவரும் பயன்படுத்தலாம். தற்காலிக இண்டர்நெட் பைல்கள், விண்டோஸ் சிஸ்டம் ஏற்படுத்தும் தற்காலிக பைல்கள், லாக் இன் சம்பந்தப்பட்ட பைல்கள், குக்கீஸ் என தற்காலிக பைல்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம். இவை எல்லாவற்றையும் தானாக சிகிளீனர் நீக்குகிறது.

அது மட்டுமின்றி, விண்டோஸ் இயங்கும்போது, இயக்கப்படும் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப் விண்டோவில் சிகிளீனர் சரி செய்கிறது. தேவையற்ற புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்து நீக்க உதவுகிறது. ரெஜிஸ்ட்ரியில் உள்ள தேவையற்றை வரிகளை, குறியீடுகளை நீக்குகிறது. பைல்களை அழிக்கும் போது, அவற்றின் சுவடு தெரியாமல் முழுமையாக அழிக்கிறது. இதன் மூலம் நமக்கு ஹார்ட் டிஸ்க்கில் இடம் கிடைக்கிறது.



தற்போது வெளியிடப்பட்டுள்ள சிகிளீனர் புரோகிராம், டூப்ளிகேட் பைல்களை இனம் கண்டு நீக்குகிறது. இதனைச் செயல்படுத்த, சிகிளீனர் புரோகிராமினை இயக்கி, டூல்ஸ் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். டூப்ளிகேட் பைல் அறியும் டூலினைப் பெற, இதன் விண்டோவில், File Finder என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். ஏற்கனவே, சில ஆப்ஷன்கள் நமக்காக, சிகிளீனர் இன்ஸ்டால் செய்திடுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். அவை அப்படியே இருக்கட்டும்.

ஆனால், மிக முக்கியமாக, Ignore என்னும் வகையில், Modified Date under Match By என்பதிலும், File Size Under என்பதிலும், டிக் அடையாளம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். சிஸ்டம் பைல்ஸ் என்று இருக்கும் இடத்தில் Ignore ஆப்ஷனில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், பல சிஸ்டம் பைல்கள், இரண்டு டைரக்டரிகளில் அல்லது இரண்டு போல்டர்களில் இருக்க வாய்ப்புண்டு. இவை, நீக்கப்பட்டால், சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்படலாம்.

இனி, கம்ப்யூட்டரில் உள்ள டூப்ளிகேட் பைல்களை எப்படி நீக்கலாம் என்பதனைப் பார்க்கலாம். மாறா நிலையில், சிகிளீனர், அனைத்து ட்ரைவ்களையும் தேர்ந்தெடுத்துக் காட்டும். கம்ப்யூட்டரே, சிகிளீனர் மூலம் ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டால், அந்த வேலை அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, டூப்ளிகேட் பைல்கள் உள்ள போல்டர்கள் அல்லது ட்ரைவ்கள் எவை என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.


போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, பிரவுஸ் பட்டன் கிளிக் செய்து, வழக்கமான முறையில், போல்டர்களையும் பைல்களையும் தேர்ந்தெடுங்கள். தேர்ந்தெடுத்த பின்னர், Search பட்டனில் கிளிக் செய்தால், ஸ்கேன் தொடங்கப்படும். ஸ்கேனிங் முடிந்த பின்னர், சிகிளீனர், அது கண்டறிந்த டூப்ளிகேட் பைல்களைப் பட்டியலிடும். இரண்டு அல்லது அதற்கும் மேலான இடத்தில் உள்ள பைல்கள் தொடர்ச்சியாக இணைத்தே பட்டியலிடப்படும். எந்த பைலை நீக்க வேண்டுமோ, அவற்றை, அதன் அருகே உள்ள செக் பாக்ஸில், டிக் செய்து தேர்ந்தெடுக்கவும். சிகிளீனர் மீண்டும் ஒருமுறை, உங்களிடம், நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்களை உறுதியாக நீக்கவா என்றுகேட்கும். சரி என்று சம்மதத்திற்கென கிளிக் செய்தவுடன், டூப்ளிகேட் பைல் நீக்கப்படும்.

0 comments:

Post a Comment