Tuesday, January 28, 2014

பறவைக் காய்ச்சல் பீதி: 20 ஆயிரம் கோழிகளை அழிக்க அரசு உத்தரவு..!

பறவைக் காய்ச்சல் பீதி: 20 ஆயிரம் கோழிகளை அழிக்க ஹாங்காங் அரசு உத்தரவு


சீனாவின் சந்திர புத்தாண்டு வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்று பெருமளவில் விற்பனையாகும் என்று இறக்குமதி செய்யப்பட்ட 20 ஆயிரம் கோழிகளை பறவைக்காய்ச்சல் பீதியினால் முற்றிலும் அழித்துவிட ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் பறவைக் காய்ச்சல் வைரசான எச்7என்9 தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து திரும்பிய இரண்டு பேர் பறவைக்காய்ச்சல் நோய்க்குப் பலியானதைத் தொடர்ந்து ஹாங்காங்கில் இது குறித்த அச்சம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சீனாவில் இந்த மாதக் கணக்கின்படி இறந்த 22 பேருடன் இந்த நோய்த்தாக்கத்தினைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மிகவும் பாதிக்கப்பட்ட ஷிஜியாங் மாகாணத்தில் உள்ள அனைத்து கோழிக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஹாங்காங்கின் மொத்த கோழி விற்பனை சந்தையான சேங் ஷா வான், நோய்த்தொற்று நீக்கத்திற்காக 21 நாட்கள் மூடப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்கி இறந்த கோழிகளை பாதுகாப்பு உடைகளும், முகமூடிகளும் அணிந்துள்ள அதிகாரிகள் கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி வெளியேற்றுவதை தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகின்றது. விற்பனை வாய்ப்பு நிறைந்த இந்த விடுமுறை நாட்களில் தங்களுடைய உற்பத்தியை விற்பனை செய்யமுடியாமல் விவசாயிகளும், பண்டிகை காலத்திற்கு கோழிகளை வாங்கமுடியாமல் நுகர்வோர்களும் அதிருப்தியுற்றுள்ளனர்.

கோழிகளை உள்ளே கொண்டுவரும் முன்னரே எல்லைப்புற சோதனைச் சாவடிகளில் இந்த பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். சந்தைக்குக் கொண்டுவரப்பட்டபின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் உள்ளூர் கோழிகளும் சேர்ந்து அழிக்கப்படுவதாக வர்ததகர்கள் குறிப்பிட்டனர். இந்த நஷ்டத்திற்கு அரசே பொறுப்பேற்கவேண்டும் என்றும் கூறிய சில வர்த்தகர்கள் நேற்று இரவு ஹாங்காங்கின் நிர்வாகக் கவுன்சிலின் தலைவர் லெயுங் சன்-இங் இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

0 comments:

Post a Comment