Tuesday, January 28, 2014

இனி பார்வையற்றவர்களாலும் காட்சிகளைக் காண முடியும் ! விசேஷக் கருவிக் கண்டுபிடிப்பு.!



பார்வையற்றோர்  காட்சிகளைக் காண வழி செய்யும் ஒருவித விசேஷக் கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல வருடங்களாக கண்கள், பார்வை குறித்த ஆராய்ச்சியில்  ஈடுபட்டு வந்த ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் மூலம் காட்சிப் பதிவுகளிலிருந்து வரும் ஒளி அலைகள் (Light waves) பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்தக் கருவியில் ஒலி அலைகளாகப் (Sound waves)  பதிவு செய்யப்படுகிறது. பின்பு மீண்டும் ஒலி அலைகளை  ஒளி அலைகளாக மாற்றி (காட்சி) அதனை மூளைக்கு அனுப்புகிறது. எனவே மனித மூளையில் உள்ள ஒளி உணரும் பகுதி, காட்சிகளை அப்படியே படம் பிடித்தாற்போல் உணர்ந்து கொள்கிறது.

இது குறித்து ஜெருசலேமிலுள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் அமிர் அமேதி கூறுகையில்;

இந்த நவீனக் கருவியில் ஒருவித கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா, காட்சிகளின் ஒளி அலைகளை உள்வாங்கி பதிவு செய்துகொள்ளும். இதனுள் உள்ள, ‘விஷுவல் வேர்டு ஃபார்ம்’ (Visual Word Form) எனும் தொழில்நுட்பம் காட்சிப் பதிவுகளுக்கான ஒலி மற்றும் ஒளியியல் மொழிகளைக் கொண்டுள்ளது.

எனவே ஒளி அலைகளை (Light waves) ஒலி அலைகளாக (Sound waves) மாற்றி மூளைக்கு அனுப்பும். மனித மூளையிலுள்ள காட்சிகளை உணரும் பகுதியில் இவை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றம் செய்யப்படுவதால் பார்வையற்றவர்களுக்கு காட்சிகளை நேராகக் காண்பது போன்ற உணர்வு ஏற்படும். மேலும் இந்தக் கருவியில் உள்ள, சென்சரி சப்ஸ்டியூசன்கள் காட்சிப் பதிவுகளை, ‘விஷுவல் டூ ஆடியோ - ஆடியோ டூ விஷுவல்’எனும் முறையில் காட்சிகளாக மாற்றம் செய்கிறது. இதற்கு  சவுண்ட் ஸ்கேப்"  (Sound Scape) என்று பெயர்.

தற்போது முதல் கட்டமாக இந்தக் கருவியை பார்வையற்றவர்களிடம் சோதனை செய்ததில் அவர்களால் காட்சிகளைத் தெளிவாகக் காண முடிந்தது. முதல் கட்ட ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த கட்டமாக முழுப் பணிகளும் முடிந்தபின் கருவியை ஒளி வெளியிடுவோம். இதன் மூலம்  பார்வையற்றவர்களின்  நீண்ட நாள் கனவு நிறைவேறும். அவர்களாலும் இந்த உலகத்தைக் காண முடியும்" என்கிறார் அமிர் அமேதி.

'கிணற்றுத் தவளையும்...கடல் தவளையும்'.........குட்டிக்கதை




ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது..அது அங்கேதான் பிறந்து வளர்ந்ததால் கிணற்றைத் தவிர அதற்கு எதுவும் தெரியாது.

ஒரு நாள் வேறு தவளையொன்று அக்கிணற்றுக்கு வந்தது...இரு தவளைகளும் பின் நட்புடன் பழக ஆரம்பித்தன...

ஒரு நாள் புது தவளை 'இந்தக் கிணறு சிறியதாக இருக்கிறது..நான் வாழும் இடம் பெரிது' என்றது.

'நீ எங்கே வாழ்கிறாய்?' என் கிணற்றுத்தவளை கேட்டது.

புதிய தவளை சிரித்தவாறே ....'நான் கடலிலிருந்து வந்தேன் ..கடல் மிகப்பெரியதாக இருக்கும்' என்றது.

'உன் கடல்..என் கிணறு போல இருக்குமா?' என்றது கிணற்றுத்தவளை...

அதற்கு புதிய தவளை ..'உன் கிணற்றை அளந்து விடலாம்...சமுத்திரத்தை யாராலும் அளக்கமுடியாது'என்றது.

'நீ சொல்வதை என்னால் நம்ப முடியாது..நீ பொய்யன்.உன்னுடன் சேர்ந்தால் எனக்கு ஆபத்து'என்றது கிணற்றுத்தவளை. மேலும்..'பொய்யர்களுக்கு இங்கு இடமில்ல.நீ போகலாம்'என கடல் தவளையை விரட்டியடித்தது.

உண்மையில் இழப்பு கிணற்றுத்தவளைக்குத் தான்.

நாமும் நமக்கு எல்லாம் தெரியும்..நாம் இருக்கும் இடமே உலகம்,,,நம் கருத்து எதுவாயினும் அதுவே சிறந்தது என எண்ணி...நம் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் கிணற்றுத் தவளையாய் இருந்து விடக்கூடாது.

புத்திசாலித்தனம்...........குட்டிக்கதை





படிக்காத ஒருவன்...மெத்தப் படித்த ஒருவனும் அடுத்த ஊருக்குச் செல்ல புறப்பட்டனர்.படிக்காதவன் ஒரு பை நிறைய பணம் எடுத்துக்கொண்டான்.படித்தவனோ கையில் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.

சிறிது தூரம் அவர்கள் நடந்ததும் இருண்ட காடு வந்தது,காட்டினுள் நடந்தனர்..பசிக்கு.. அங்கு மரங்களில் பழுத்திருந்த பழங்களை உண்டனர்.

திடீரென ..திருடர்கள் கூட்டம் ஒன்று அவர்களை வழிமறித்தது.

படிக்காதவனிடம் இருந்த பணமூட்டையைக் கேட்க படிக்காதவன் கொடுக்க மறுக்க..அவனை நைய்யப் புடைத்து பணப்பையினை பிடுங்கிக் கொண்டார்கள்.

படித்தவனைப் பார்த்து..'உன்னிடம் இருப்பதையும் கொடு' என்றனர்....

படித்தவன் தன்னிடம் ஒன்றுமில்லை என்று கூறியதோடு திருடர் தலவனைப் புகழ்ந்து புத்திசாலித்தனமாக ஒரு இனிய பாடலைப் பாடினான்...பாடலைக் கேட்ட திருடர் தலைவன் மகிழ்ந்தான். படிக்காதவனிடமிருந்து பிடுங்கிய பணமூட்டையிலிருந்து சிறிது பணத்தை படித்தவனிடம் எடுத்துக் கொடுத்தான்.

ஒருவனது புத்திசாலித்தனம் அவனை ஆபத்துக் காலத்தில் காப்பாற்றும்.அதற்கு கல்வியறிவு அவசியம்.

'எல்லோரும் நல்லவரே'.........குட்டிக்கதை




ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.அதைக் கொத்தித் தின்ன விரும்பியது.அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது...புழுவின் இந்த செய்கை புறாவிற்கு வியப்பைத் தந்தது...'நான் உன்னை தின்ன வருவது தெரிந்ததும்..அசையாமல்..என்னிடம் பயம் இல்லாமல் இருக்கிறாயே..எப்படி' என்றது புறா.

'என் மனதிற்குள் ...நீ என்னை துன்புறுத்தமாட்டாய் என்றே தோன்றுகிறது'என்றது புழு.

'என் மனதில் உள்ளது உனக்கு எப்படித் தெரியும்'என புறாக் கேட்டது.

'உன்னைப் பார்த்ததும்..உன்னை என் தோழனாக நினைத்து விட்டேன்..நண்பனுக்கு ஆபத்து வந்தால் காப்பவன் நண்பன் அல்லவா..உயிர் காப்பான் தோழன் ஆயிற்றே..சரி..உனக்கு ஒன்று சொல்கிறேன்..வேடன் ஒருவன் வலைவீசி உன்னைப் பிடித்தால் உனக்கு வருத்தம் ஏற்படாதா ...? அதே போன்று தானே..நீ என்னைத் தின்றால் நானும் வருத்த மடைவேன்.

அது போலவே..அந்த வேடன் உன்னை விடுவித்தால்..நீ எவ்வளவு சந்தோஷம் அடைவாய்...நீயும் என்னை விட்டு விட்டால் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்..அதுதானே நட்பின் இலக்கணம் என்றது.

புறா...புழுவின் பேச்சுத் திறமையை பாராட்டி விட்டு புழுவை விட்டுச் சென்றது.

நல்ல குணம் கொண்ட புறா போன்றவர்கள் ஒருவருக்குக் கெடுதல் செய்யும்போது ..எடுத்துச் சொன்னால் தன்னைத் திருத்திக்கொள்வார்கள்.

உலகில் எல்லோரும் நல்லவர்களே!.